’என்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சாதி சொல்லி வாக்கு கேட்கிறார்’ - வைகோ புகார்

என்னை எதிர்த்து போட்டியிடும் கோவில்பட்டி திமுக வேட்பாளர் சாதியைச் சொல்லி வெளிப்படையாக வாக்கு கேட்டுள்ளார். அவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தேமுதிக வேட்பாளர் எம்.செய்யது காஜா செரீபை ஆதரித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ "மதுவை ஒழிப்போம் என ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூறுகின்றனர். திமுக ஆட்சியில் அதிமுகவைச் சேர்ந்தவர்களின் மது ஆலையிலிருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு மது வாங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு திமுக கட்சியைச் சேர்ந்தவர்களின் மதுஆலையில் இருந்து மது வாங்கப்பட்டுள்ளது. இதற்காக 15 சதவீதம் கமிசன் தொகை ஆளும் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலில் எதிரும் புதிருமாக, பூனையும் எலியுமாக, இரு துருவங்களாக இருப்பவர்கள் மது விற்பனையில் மட்டும் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், இவர்கள் தான் மதுவை ஒழிக்கப் போகிறோம் எனக் கூறுகின்றனர். மதுபோதையில் கொலை, கொள்ளை தமிழகத்தில் அதிகம் நடக்கிறது.ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கும், கலைஞர் குடும்பம் மீது 2 ஜி வழக்கும் உள்ளது. இவர்கள் இருவரையும் தமிழகமக்கள் புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் மீட்க முடியாத நரகத்திற்கு சென்று விடும். ஓட்டுக்கு பணம் கொடுக்க இரு கட்சிகளும் தயாராகி விட்டன. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் அதைத் தடுக்க வேண்டும். நான் பேசாத வார்த்தைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், சிறுதாவூர் பங்களாவில் 11 லாரிகளில் பணம் கொண்டு செல்லப்படுகிறது என நான் கூறிய போது நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை எதிர்த்து போட்டியிடும் கோவில்பட்டி திமுக வேட்பாளர் சாதியைச் சொல்லி வெளிப்படையாக வாக்கு கேட்டுள்ளார். அவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment