பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்து அழைத்து வந்தார்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி
எவ்வளவு பணம் கொடுத்து அழைத்து வந்தார்கள் என்று பொதுக்கூட்டத்தில் இருப்பவர்களிடம் விசாரித்து அந்த செலவை கட்சிகளின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம் பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக வருகிற சட்டமன்ற தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை தடுக்க முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு எப்படியெல்லாம் பணம் கொடுப்பார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக வெளிமாநிலங்களை சேர்ந்த பயிற்சியில் உள்ள 118 ஐபிஎஸ் அதிகாரிகள் வருகிற 22 ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பறக்கும் படையில் இடம் பெறுவார்கள். அவர்கள் வாகன சோதனையின்போது உடன் இருப்பார்கள். இது தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய வருமான வரித்துறையை சேர்ந்த 9 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணம் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பார்கள். இவர்களுக்கு தற்போது கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு ஐஆர்எஸ் அதிகாரி செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொது பார்வையாளர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர் இருப்பார். அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வீடியோ கேமராமேனுடன் சென்று அங்கு வருபவர்களிடம், அரசியல் கட்சியினர் எவ்வளவு பணம் கொடுத்து அழைத்து வந்தார்கள் என்று கேட்டு அவர்கள் கூறும் பதில் பதிவு செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு ஆளுக்கு 300 ரூபாய் மற்றும் பிரியாணி, தண்ணீர் பாக்கெட் ஆகியவை கொடுத்திருந்தால் அவற்றின் ஒவ்வொன்றிற்கும் நாங்கள் விலைப்பட்டியல் வைத்துள்ளோம். அந்த விலைபட்டியலின்படி ஒருவருக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கிடப்படும். அந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்திருப்பார்கள் என்று தோராயமாக கணக்கிட்டு அதற்கான மொத்த செலவும் அந்த கட்சியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். இதுதவிர அந்த கூட்டத்துக்கு எத்தனை வாகனங்கள் வந்துள்ளன என்றும் கணக்கிடப்படும். ஒரு வாகனத்துக்கு இவ்வளவு வாடகை என்று கணக்கிட்டு அந்த செலவும் கட்சியின் செலவு கணக்குடன் சேர்க்கப்படும். பொதுக்கூட்டத்துக்கு ஆன செலவு குறித்து அந்த கட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். வேட்பு மனுதாக்கலுக்கு பின்னர் செய்யப்படும் செலவு அந்தந்த வேட்பாளர்களின் செலவு கணக்குடன் சேர்க்கப்படும். வேட்பு மனு தாக்கல் வருகிற 22 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும் தேர்தல் அலுவலர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர் விரும்பினால் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. வேட்பாளர் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. விருப்பப்பட்டால் வேட்பாளர் இதை செய்யலாம். கிராமங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க எந்த கட்சியையும் சேராத 10 இளைஞர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த கிராமத்துக்கு யாராவது ஓட்டு போட பணம் கொடுக்க வந்தால் அது பற்றி மாவட்ட தேர்தல் அதகாரி அல்லது பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அத்தகைய குழுக்கள் விரைவில் அமைக்கப்படும். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு செல்போன் டாப்-அப் செய்யும் வகையில் பணம் கொடுக்கலாம் என்று புகார்கள் வந்துள்ளன. அதை தொடர்ந்து அனைத்து செல்போன் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கிறது. செல்போன் நிறுவன ஏஜெண்டுகள் இசிஎஸ் மூலம் செல்போன்களுக்கு டாப்-அப் செய்கிறார்கள். கடந்த மாதத்தை விட மிக அதிகமாக இந்த மாதம் எந்த ஏஜெண்டு டாப்-அப் செய்கிறார் என்பன போன்ற விவரங்களை அளிக்குமாறு செல்போன் நிறுவன பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்படும். இது தவிர வீடு, வீடாக பால் பாக்கெட் போடுபவர்கள், பத்திரிகை போடுபவர்கள் மூலமும் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற தகவல் வந்துள்ளதால் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆலோசனை நடத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் 2 பேர் இறந்தது குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரிக்கிறார்கள். பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அவசரமாக நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சி நடத்த வேண்டியிருந்தால் அதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறலாம். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வீடியோ காட்சிகள் அனைத்து தியேட்டர்களிடம் ஒளிபரப்பப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment