காரசார விவாதத்தின் இடையில் சின்ன சிரிப்பலை: சட்டசபை சுவாரஸ்யம்

Share this :
No comments


நேற்று சட்டசபையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் தான் நேற்று இரவு தமிழ் தொலைக்கட்சிகளிலும் விவாத பொருளாக மாறியது.

கச்சத்தீவு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது, திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சொல்லி அழைக்க கூடாது என அனல் பறந்த கூட்டத்தின் இடையே நேற்று சிறிய சிரிப்பலையும் ஏற்பட்டது.

சென்னை மழை வெள்ளம் குறித்து பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சென்னையில் பெய்த மழையும், மழையால் ஏற்பட்ட வடுக்களும், மறையாத சூழ்நிலையில் என பேச ஆரம்பித்தார். ஆனால் அப்போது அவரை பேச விடாமல் அதற்கு பதில் அளிக்க அமைச்சர் உதயகுமார் முயன்றார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் பேச துவங்கும் முன்பே, அமைச்சர் எழுவது ஏன் என திமுகவினர் கேள்வி எழுப்பினர். எம்.எல்.ஏ.க்கள் பேசும் போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளிக்க உரிமை உள்ளது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

சுப்ரமணியன் ஏதேனும் பிரச்னையை எழுப்பினாரா, குறைபாடு கூறினாரா, விளக்கம் கேட்டாரா, அவர் பேச துவங்கும் முன்னரே அமைச்சர் எழுந்திருப்பது முறையா? என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவை முன்னவர் பன்னீர்செல்வம், மழை சுவடு மறையவில்லை என கூறியதால், அமைச்சர் பதில் கூற எழுந்துள்ளார் என்றார். அதன் பின்னர் அமைச்சர் உதயகுமார் தனது விளக்கத்தை கூறினார்.

பின்னர், பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி கேட்காமலே, பதில் கூறும் வினோதத்தை, இந்த சபையில் பார்க்கிறேன் என்றார். அவர் இவ்வாறு கூறியதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.

No comments :

Post a Comment