ஸ்ரீதிவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சரியாகப் போகவில்லை. சென்ற வாரம் வெளியான பென்சில் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியே கண்டுள்ளது.
இந்நிலையில், மே 20 வெளியாகும் மருது படத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்.
மருது பற்றி சொல்லுங்க...
பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குணத்தில் ஆணைப் போன்ற வேடம். அதனை திறம்பட செய்ய இயக்குனர் முத்தையாதான் உதவினார்.
இந்த கதாபாத்திரத்தின் ஸ்பெஷல் என்ன...?
விஷாலின் காதலியாக வந்து மனைவியாகும் வேடம். கிராமத்து பெண். ராஜபாளையம் வட்டார மொழி பேசி நடித்திருக்கிறேன்.
விஷாலுக்கு தேசிய விருது கிடைக்காததற்கு வருத்தப்பட்டீர்களாமே...?
அவன் இவன் படத்தில் மாறுகண் உடையவராக விஷால் நடித்திருந்தார். அப்படி அதற்குமுன் யாரும் நடித்ததில்லை. நவரசம் காட்டும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருந்தார். அவருக்கு விருது இல்லை என்றதும் வருத்தப்பட்டேன்.
பேய் படத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது?
'சங்கிலி புங்கிலி கதவத் தொற' ஒரு பேய் படம். நான் நடிக்கும் முதல் பேய் படம் இதுதான். ஒவ்வொரு காட்சியும் இயக்குநர் வந்து சொல்லிக் கொடுப்பார். அதனால் எப்போதுமே பேய்ப் படம் என்ற எண்ணமே இருக்கும். திடீரென்று அந்த வீட்டின் ஜன்னலில் பார்த்தால் வெள்ளையா யாரோ போற மாதிரி இருக்கும். சில சமயங்களில் நானே பயந்திருக்கிறேன்.
காஷ்மோரா படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறீர்கள். யாருக்கு என்ன வேடம்...?
அதெல்லாம் சொல்ல முடியாது, சஸ்பென்ஸ். நானும் நயன்தாராவும் நாயகிகள். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.
நயன்தாராவுடன் நடித்த அனுபவம் எப்படி?
இதுவரை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் காட்சி வரவில்லை.
கார்த்தியுடன்...?
கார்த்தி சாரோட நடித்தது அருமையாக இருந்தது. ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்துகொண்டே ஜாலியாக இருப்பார். காட்சி என்று வரும்போது ஈஸியாக நடித்துவிடுவார்.
கார்த்தியின் ரசிகையாகிவிட்டீர்களா...?
இல்லை, நான் சூர்யாவின் பெரிய ரசிகை. சில்லுன்னு ஒரு காதல் தெலுங்கில் பார்த்தேன். அப்போதிலிருந்தே அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன்.
நற்பணிகள் அதிகம் செய்கிறீர்களே...?
அதுக்கு அம்மாவின் மனசுதான் காரணம். நான் கொடுக்கலாம் என்றாலும் என் குடும்பம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சென்னையில்தானே நான் இவ்வளவு பெரிய நடிகையாகியிருக்கிறேன். அந்த மக்களுக்குக் கொடுக்கும்போது சந்தோஷமாக இருந்தது. வெள்ள சமயத்தில் இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மனநிலையில்தான் இருந்தேன். ராஜபாளையத்தில் ஒரு கிராமத்தில் டாய்லெட் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். விஷால் உதவலாம் என்றார், உடனே பண்ணினேன்.
No comments :
Post a Comment