சகாயம் செல்லும் இடமெல்லாம் சொல்லும் பெயர் யாருடையது தெரியுமா?

நேர்மையான அதிகாரி என்ற அடிப்படையில், தமிழகத்தில் இன்று இளைஞர்களால் சகாயம் முன்னிறுத்தப்படுகிறார். அப்படிப்பட்ட சகாயம், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒருவருடைய பெயரை மேடைகளில் பேசிவருகிறார். யார் அந்த மனிதர்? சகாயம் இப்படி சொல்லும் அளவுக்கு, அவர் அப்படி என்ன சாதனையை செய்து விட்டார்..? கடந்த ஆண்டு நாமக்கலில் ‘நம்பிக்கை இல்ல’ அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய சகாயம், “நான் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது, ஒரு குறைதீர்ப்பு நாளன்று மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தேன். கூட்டத்தை முடித்துவிட்டு நான் வெளியே வருபோது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர், பார்க்கவே பரிதாபமாக இருக்கக்கூடிய, வறுமையிலும் வறுமையாக, பத்துநாள் சாப்பிடாமல் இருந்ததைப் போன்ற தோற்றத்துடன், 'எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா...' என்றபடி வந்து நின்றார். 'உங்கள் பெயரென்ன... எங்கிருந்து வருகிறீர்கள்?' என கேட்டேன். தான் வ.உ.சி.யின் பேரன் என்றார் அவர். வ.உ.சியின் பேரனா என அதிர்ச்சியாகி, எந்த வ.உ.சி? என்றேன். 'கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் பேரன்தான்' என்றார். நான் அதிர்ந்து போனேன். கிழிந்த கைலி, பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த தேசத்தினுடைய விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், யாருக்குமே கிடைக்காத இரட்டை ஆயுள் தண்டனைக்கு ஆளான விடுதலை போராட்ட வீரரின் பேரனுக்கா இந்த நிலைமை? என அதிர்ச்சியடைந்து உடனடியாக அவருக்கு வங்கியின் மூலம் உதவ ஏற்பாடு செய்தேன். இந்த சம்பவத்தை சென்னையில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆதங்கத்தோடு பேசினேன். அது ‘ஜூனியர் விகடனில்’ செய்தியாக வெளிவந்தது. அந்த செய்தியை பார்த்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து ஒரு மனிதர் என்னை தொடர்பு கொண்டார். 'ஐயா... வ.உ.சி.யினுடைய பேரனின் நிலையை படித்ததும் நான் கலங்கிப்போனேன். அவருக்கு உதவ ஆசைப்படுகிறேன். என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. அந்த ஒரு லட்சம் ரூபாயை உங்கள் மூலம் அவருக்கு கொடுக்க விரும்புகிறேன்' என்றார். உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள் என்று கேட்டேன். 'எனக்கு மின்னஞ்சல் எல்லாம் இல்லை' என்றார். இந்த காலத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லையா? என்றேன். 'நான் அவ்வளவெல்லாம் படிக்கவில்லை' என்றார். ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்றதும், மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பார். இல்லையென்றால் கணினிp பொறியாளர் அல்லது டாக்டராக இருப்பார் என்று நினைத்திருந்தேன். அதற்கு பிறகுதான், நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்றேன். அப்போது அவர் சொன்னார், 'ஐயா நான் இங்கு ஒரு வாகன ஓட்டுனராக இருக்கிறேன்' என்றார். அவர் பெயர் என்ன தெரியுமா? ‘மதியழகன்’. இந்த நம்பிக்கை இல்ல நிகழ்வுக்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார். ஒரு பொறியாளருக்கு, ஒரு மருத்துவருக்கு வராத எண்ணம் ஒரு வாகன ஓட்டுனருக்கு வந்திருக்கிறதே, இது எவ்வளவு பெரிய விஷயம். மகிழ்ச்சி... மகிழ்ச்சி... இனி நான் செல்லும் இடங்களிலெல்லாம் சொல்லும் பெயர் மதியழகனாகத்தான் இருக்கும்'' என்றபடி, சகாயம் மதியழகனை அறிமுகப்படுத்தி வைக்க, வ.உ.சியின் பேரனுக்காக ஒரு லட்சத்துக்கான செக்கை கொடுத்துவிட்டு போனார் மதியழகன். இது நடந்து ஒருவருடம் ஆகிறது. அடிக்கல் நாட்டப்பட்ட ‘நம்பிக்கை இல்ல கட்டடம்’ திறக்கப்பட்டது. அந்த விழாவிற்கும் கையில் ஒரு லட்சம் ரூபாய் செக்கோடு வந்திருந்தார் மதியழகன். அந்த ஒரு லட்சம் யாருக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நம்பிக்கை இல்ல அடிக்கல் நாட்டுவிழாவில் பேசும்போது “பாண்டமங்கலத்தில் ஒரு தியாகியின் மகள் இருக்கிறார். அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. ஒழுங்கான வீடு இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்' என சகாயம் வருத்தப்பட்டார். அந்த தியாகியின் பெண்ணுக்கு வீடு கட்டித்தருவதற்குத்தான் இந்த முறை ஒரு லட்சம் கொண்டு வந்திருந்தார் மதியழகன். அதுமட்டுமல்லாது, அதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் கட்டியிருக்கும் நம்பிக்கை இல்லத்துக்கு தனியாக ஐம்பதாயிரம் கொடுத்தார். இந்த முறையும் சகாயம் உறுதியாக சொன்னார். ‘நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் சொல்லும் பெயர் மதியழகன்’ என்று. மதியழகனிடம் பேசினோம். “நாட்டுக்காக போராடுனவங்க குடும்பம் இன்னைக்கு கஷ்டப்படுது. அவுங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி அவ்வளவுதான். மத்தபடி பேப்பர்ல போடுற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளு இல்ல விட்ருங்க” என்று சங்கோஜப்பட்டார். 50 ரூபாய்க்கு டியூப்லைட் வாங்கி கொடுத்துவிட்டு அதன் பிரகாசத்தை மறைக்கும் அளவு தங்கள் பெயரை 'உபயதாரர்' என எழுதிக்கொள்ளும் நாளில், மதியழகன்களும் இருக்கிறார்கள் என்பது பெருமிதமாக உள்ளது. இறுதிச்சுற்று மதியை கொண்டாடிய நாம், இது போன்ற 'மதி'களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment