சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ஒரு வாரமகியும் குற்றவாளியை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வழக்கில் தினமும் பல்வேறு தகவல்கள் வந்தவாறே உள்ளன.
சுவாதி வழக்கில் இது வரையிலான நிகழ்வு:-
* சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் செங்கல்பட்டு அருகில் உள்ள இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுவாதி என்னும் இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
* காலையில் ரயில் நிலையத்தில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
* 6:30 மணியளவில் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை 8:30 மணிக்கு பின்னரே ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவல் துறையினர் எடுத்தனர். இடைப்பட்ட நேரத்தில் யாருமே சுவாதியை மருத்துவமனைக்கு எடுத்து சொல்லவோ கொலை செய்தவனை பிடிக்கவோ முன்வர வில்லை.
* சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகமே இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்தது. சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பாத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
* ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சுவாதியை கொலை செய்தவன் யார் என்பது தெரியவில்லை.
* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் சுவாதியை கொலை செய்தவன் இவன்தான் என சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது காவல் துறை.
* பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக அந்த நபர் கொலை செய்துவிட்டு ரயில் நிலையத்தில் ஓடும் காட்சியும் பின்னர் ரயில் நிலைய சுவர் வழியா குதித்து ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் காட்சியும் பதிவான சிசிடிவி வீடியோ வெளியானது.
* இந்த வழக்கை விசாரிக்கும் திறமை ரயில்வே போலிசாருக்கு இல்லை என்பதால், இது தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
* காவல் துறை நடத்திய விசாரணையில் சுவாதி கங்கையம்மன் கோவிலுக்கு சென்றபோது ஒரு நபர் பின் தொடர்ந்து வந்து நான் யாரென்று தெரிகிறதா என கேட்டார், அதற்கு சுவாதி தெரியவில்லை என கூற, நல்லா யோசிச்சு பார் நான் யாரென்று தெரியும் என அந்த நபர் கூறியதாக இதனை பார்த்த கோயில் பூசாரி கூறியுள்ளார்.
* சுவாதியை அந்த நபர் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார். சுவாதியின் தோழியும் இரண்டு முறை அவனை பார்த்துள்ளார்.
* அவன் யாரென்றே தெரியவில்லை, என்னை பின் தொடர்ந்து வந்து நான் யாரென்று தெரிகிறதா என கேட்கிறான் என சுவாதி அவளது தோழியிடம் கூறியிருக்கிறார். சுவாதியின் தோழி இதனை இப்படியே விடக்கூடாது என எச்சரித்துள்ளார்.
* மேலும் சுவாதி, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தனது ஆண் நண்பர் ஒருவரிடமும் கூறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
* சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள் கோடம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் கொலையாளி தனது கைரேகையை அழித்து விட்டு போட்டு சென்றுள்ளான்.
* கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைகாரனின் சட்டை பட்டன்கள் இரண்டு கைப்பற்றப்பட்டது.
* சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அந்த நாய் மோப்பம் பிடித்து தண்டவாளம் வழியாக கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை சென்று திரும்பியது.
* அரிவாளை கைப்பற்றிய காவல் துறை அதில் கைரேகை அழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் கைரேகை பதிவாகியுள்ளதை வைத்து ஆதார் அட்டை மூலம் குற்றவாளி யார் என கண்டறிய முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வந்தன.
* கொலை செய்வதற்கு குற்றவாளி பயன்படுத்தியது புதிய அரிவாள். இந்த அரிவாள் கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பயன்படுத்தும் அரிவாள் என கூறப்படுகிறது.
* சுவாதி பணிக்கு சேரும் போது பெங்களூரில் அவருக்கு சில மாதங்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது. எனவே அங்கு ஏதாவது அவருக்கு பிரச்சனை இருந்ததா என்பதை விசாரிக்க தனிப்படை பெங்களூர் அனுப்பப்பட்டது.
* கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான். பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த கொலையை நேரில் பார்த்ததாக ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் பேட்டியளித்தார். அதில், பெண்ணுடன் 10 நிமிடங்களுக்கு மேல் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. திடீரென்று அந்த வாலிபர் பையில் வைத்திருந்த அரிவாளால் அந்த பெண்ணை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நான் மேலிருந்து இறங்கி ஓடினேன். ஆனால் ஒருவர் கூட அந்த கொலையாளியை பிடிக்க முன்வரவில்லை. எல்லோரும் சேர்ந்து விரட்டியிருந்தால் அவனை பிடித்திருக்கலாம் என்று கூறினார்.
* சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி அதை ஆய்வு செய்ததில் சுவாதி இரண்டு பேரிடம் அதிகமாக சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர். அதில் ஒருவரின் தோற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நபரின் உருவத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.
* இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த கேண்டீன் ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சுவாதியும், அந்த கொலைகாரணும் சிறிது நேரம் கேண்டீன் அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.
அப்போது திடீரென்று ‘அய்யோ... அம்மா...’ என்று குரல் கேட்டது. அந்த கொலைகாரன் பக்கவாட்டில் கொஞ்சம் பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்து, பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.
சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்ததால் எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார் என அந்த கேண்டீன் ஊழியர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் சுவாதியை கொலை செய்தவன் என காவல் துறையினரால் சந்தேக குற்றவாளி என கூறி வெளியிடப்பட்ட நபர் தான் அது என கேண்டீன் ஊழியர் உறுதிப்படுத்தினார்.
* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி சென்னை திருவான்மியூரில் ஜூன் 28-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து இந்த செய்தி உண்மையல்ல எனவும், இது வெறும் வதந்தி தான் என காவல் துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் குற்றவாளியை நெருங்கிவிட்டோம், இன்னும் சில தினங்களில் பிடித்துவிடுவோம் என காவல் துறை தெரிவித்தது.
* சுவாதி பற்றிய எல்லா தகவல்களையும் கொலையாளி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தன் நண்பர் ஒருவனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வந்துள்ளான். அதற்கான ஆவணங்களை கைப்பற்றும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தியும் உலா வந்தது.
* மேலும் கொலையாளி சுவாதி பணிபுரிந்த அலுவலகத்துக்கு அருகில் சென்று நோட்டமிட்டதாகவும் தகவல்கள் வந்தன. சுவாதி வேலைக்கு செல்ல பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கிதான் செல்வார். ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்திலும் அந்த நபர் சுவாதியை பின் தொடர்ந்துள்ளான். இரண்டு நாட்களாக அந்த நபரை அங்கே பார்த்ததாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.
* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மூலம் பதிவாகிய கொலை செய்தவனின் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தது. இந்நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை தொழில்நுட்ப உதவியுடன் கொஞ்சம் தெளிவாக வெளியிட்டனர்.
* சுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் சந்தித்துப் பேசியதாகவும், அந்த நபர் சுவாதியை கன்னத்தில் சரமாறியாக அடித்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறியுள்ளார்.
* கூட்ட நெரிசலான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொன்றவனை யாரும் துரத்தி பிடிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் சுவாதி படுகொலை செய்யப்பட்ட போது அங்கே 6, 7 பேர் தான் இருந்தார்கள் எனவும் கொலை செய்த அந்த வாலிபர் நடைமேடையில் வேகமாக சென்று கொண்டிருந்தார் அவரை ஒருவர் பின்னால் ஒருவர் துரத்திக்கொண்டு ஓடினார் என இதனை நேரில் பார்த்த தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறினார்.
* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ காட்சி இன்று காவல் துறையிடம் சிக்கியது. ஆனால் இந்த வீடியோ காட்சி தெளிவில்லாமல் இருப்பதால் வண்டியின் எண் தெளிவாக தெரியவில்லை. இதனால் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
* இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க காவல் துறை 8 தனிப்படையை அமைத்தது. இந்நிலையில் கூடுதலாக மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment