சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் முதல் மீனாட்சிபுரம் வரை ஒரு அலசல்

Share this :
No comments


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ஒரு வாரம் கழித்து காவல் துறை குற்றவாளி ராம்குமாரை கைது செய்துள்ளனர். பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த இந்த வழக்கு தற்போது கொலையாளியின் கைது மூலம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சுவாதி கொலை முதல் குற்றவாளி கைது வரையிலான நிகழ்வு:-

* சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் செங்கல்பட்டு அருகில் உள்ள இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுவாதி என்னும் இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

* காலையில் ரயில் நிலையத்தில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

* 6:30 மணியளவில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை 8:30 மணிக்கு பின்னரே ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவல் துறையினர் எடுத்தனர். இடைப்பட்ட நேரத்தில் யாருமே சுவாதியை மருத்துவமனைக்கு எடுத்து சொல்லவோ கொலை செய்தவனை பிடிக்கவோ முன்வர வில்லை.

* சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகமே இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்தது. சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பாத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

* ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சுவாதியை கொலை செய்தவன் யார் என்பது தெரியவில்லை.

* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் சுவாதியை கொலை செய்தவன் இவன்தான் என சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது காவல் துறை.

* பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக அந்த நபர் கொலை செய்துவிட்டு ரயில் நிலையத்தில் ஓடும் காட்சியும் பின்னர் ரயில் நிலைய சுவர் வழியா குதித்து ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் காட்சியும் பதிவான சிசிடிவி வீடியோ வெளியானது.

* இந்த வழக்கை விசாரிக்கும் திறமை ரயில்வே போலிசாருக்கு இல்லை என்பதால், இது தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

* சுவாதியை அந்த நபர் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்தது, சுவாதியின் தோழியும் இரண்டு முறை அவனை பார்த்துள்ளார் என கூறியது, அவன் யாரென்றே தெரியவில்லை என சுவாதி தனது தோழியிடம் கூறியது உள்ளிட்ட பல தகவல்கள் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

* மேலும் சுவாதி, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தனது ஆண் நண்பர் ஒருவரிடமும் கூறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

* சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள் கோடம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் கொலையாளி தனது கைரேகையை அழித்து விட்டு போட்டு சென்றுள்ளான். கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைகாரனின் சட்டை பட்டன்கள் இரண்டு கைப்பற்றப்பட்டது.

* கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான். பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி சென்னை திருவான்மியூரில் ஜூன் 28-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக வதந்தியும் பரவியது.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ காட்சி இன்று காவல் துறையிடம் சிக்கியது. ஆனால் இந்த வீடியோ காட்சி தெளிவில்லாமல் இருப்பதால் வண்டியின் எண் தெளிவாக தெரியவில்லை. இதனால் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

* இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க காவல் துறை 8 தனிப்படையை அமைத்தது. இந்நிலையில் கூடுதலாக மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

* குற்றவாளி எடுத்து சென்ற சுவாதியின் செல்போன் இரண்டு மணி நேரம் சூளைமேடு பகுதியில் இருந்ததால் கொலையாளி அங்கு இருக்கலாம் என காவல் துறையின் பார்வை சூளைமேடு பக்கம் திரும்பியது. சூளைமேட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், மேன்சன்களிலும் காவல் துறை குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தி வந்தனர்.

* இந்த விசாரணையில் A.S.மேன்சனின் காவலாளி கொடுத்து தகவலை அடுத்து காவல் துறை அங்கு விசாரணை மேற்கொண்டு குற்றவாளி ராம்குமார் என கண்டுபிடித்து. விடுதியில் இருந்து அவனது விலாசம் உட்பட தகவல்களை பெற்று அவனது சொந்த ஊரான மீனாட்சி புரம் காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

* காவல் துறை அந்த மேன்சனில் ராம்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை செய்ததில் கொலை செய்தபோது அவர் அணிந்திருந்த இரத்த கறை படிந்த சட்டையை கைப்பற்றினர்.

* மீனாட்சிபுரம் காவல் நிலைய காவலர்கள் மப்டியில் ராம்குமாரை நோட்டமிட்டு அவர் அங்கு இருப்பதை உறுதி செய்து சென்னைக்கு தகவல் அனுப்பினர். இதனையடுத்து ராம்குமாரை கைது செய்ய உடனடியாக நெல்லைக்கு விரைந்தது தனிப்படை.

* ரயில்வே காவல்துறை அதிகாரிகள் பாஸ்கர், டி.எஸ்.பி. சங்கர்‌, தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன்‌ மற்றும் தனிப்படை போலீசார் நேற்றிரவு 10 மணி அளவில் ராம்குமாரின் இல்லத்தை சுற்றி வளைத்தனர்.‌

* அவரது வீட்டை காவல் துறை சுற்றிவளைத்த போது அங்கிருந்த நாய் குலைத்ததால் ராம்குமார் மற்றும் அவரது தாத்தா தூக்கத்தில் இருந்து முழித்துவிட்டனர். காவலர்கள் கைது செய்ய வருவதை அறிந்த அவரது தாத்தா குரல் எழுப்பியுள்ளார்.

* இதனையடுத்து ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ராம்குமாரின் வீட்டில் தடாலடியாக நுழைந்த காவல் துறை தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை தடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர்.

* இரவு 11:40 மணிக்கு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ராம்குமார். முதல் கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 12:50 மணியளவில் தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

* 1:40 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அதிகாலை 3:15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் காலை 5 மணிக்கு ராம்குமார் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

* பின்னர் அவரிடம் பேசிய காவல் துறை வாக்குமூலம் வாங்கியதாகவும், தான் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

இவ்வாறாக ஒரு வார காலமாக நீடித்து வந்த சுவாதி கொலையாளி குறித்த மர்மங்கள் இன்று தெளிவானது. ஆனால் கொலைக்கான காரணம் என்ன? யார் யாருக்கு தொடர்பு உள்ளது போன்றவை ராம்குமார் முழுமையாக காவல் துறையின் கட்டுப்பட்டுக்கு வந்த பின்னர் விசாரணையில் தெரிய வரும்.

No comments :

Post a Comment