சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கு சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையும் தொடங்கிவிட்டது. உடனடியாக சுவாதியின் ஃபேஸ்புக் கணக்கை, போலீசார் முடக்கியுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் கொலையாளி சிக்குவானா என்று வலைவிரிக்கத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வந்தாலே ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சிதான். சுவாதியும் அந்த மகிழ்ச்சியோடுதான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தார். சில நிமிடங்களிலேயே அந்த இளம்பெண்ணை, மர்ம நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்தார்.
கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளி, சுவாதியின் செல்போனையும் எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த செல்போனை குற்றவாளிதான் எடுத்து சென்று விட்டானா? அல்லது கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க நடத்திய போராட்டத்தில் செல்போன் கீழே விழுந்ததில் அதை பயணிகள் யாராவது எடுத்து சென்று விட்டார்களா? என்ற சந்தேகமும் புதிதாக எழுந்துள்ளது.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாததோடு சுவாதியின் செல்போனும் மாயமானதால் தப்பியோடிய கொலையாளி பற்றி, பெரிய அளவில் துப்பு எதுவும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை.
விசாரணை தீவிரம்
தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள சுவாதியின் கொலை வழக்கை உடனடியாக விசாரணை நடத்தி, கொலையாளியை கண்டுபிடித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுவாதி கொலை பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்
மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் ஃபேஸ்புக் கணக்கை, போலீசார் முடக்கியுள்ளனர். அதன்மூலமாக, கொலையாளி பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என்ற நோக்கில், போலீசார் விரிவாக விசாரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது
தொடர்ந்த நபர்
சூளைமேட்டில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு சுவாதி போகும் பழக்கம் உள்ளவராம். கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு போனபோது, சுவாதிக்கு பின்னால் வந்து நின்ற ஒருவர், என்னை தெரியுதா... என்று கேட்டாராம். சுவாதியோ, தெரியலையே... என்று சொல்ல... நல்லா யோசிச்சி பாரு... தெரியும் என்று சொல்லிவிட்டு போனாராம்.
பூசாரியிடம் விசாரணை
இதை அந்த கோயில் பூசாரி கவனித்திருக்கிறார். தற்போது போலீஸ் வெளியிட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளவரும், அந்த கோயிலுக்கு வந்த நபரும் ஒரே ஆளா என்பதை விசாரிக்க ஆரம்பித்துள்ளது போலீஸ்.
செல்போன் மாயம்
சுவாதியின் செல்போனை கொலையாளி எடுத்துக் கொண்டு போய்விட்டான் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த போனை ரயில் நிலையத்தில் இருந்த வேறுயாராவது எடுத்து வைத்துள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடைபெறுகிறது.
விறு விறு விசாரணை
அந்த போன் இதுவரை ஆன் செய்யப்படவில்லை. ஆனால், சென்னை போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்ட உடன் அவர்கள் கையிலெடுத்த முதல் விஷயம் சுவாதியின் செல்போன் நம்பர். அந்த நம்பருக்கான இன்கம்மிங், அவுட் கோயிங் நம்பர்ஸ் லிஸ்ட்டை வாங்கிவிட்டார்கள். கடைசி ஒரு மாதம் சுவாதி நம்பரில் இருந்து போன மெசேஜ், வந்த மெசேஜ் என அந்த லிஸ்ட்டும் போலீஸ் கைக்கு வந்துவிட்டது.
சுவாதியின் செல் நம்பர்
சுவாதி நம்பர் தொலைந்து விட்டதாக ஒரு புகார் பதிவு செய்து, டூப்ளிகேட் சிம்கார்டு அதே நம்பரில் வாங்கியிருக்கிறதாம் போலீஸ். அந்த நம்பரில் வாட்ஸ் அப் ஆக்ட்டிவேட் செய்து, வாட்ஸ் அப் மெசேஜ் வரலாறையும் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையெல்லாம் வைத்து ஓரிரு நாட்களில் கொலையாளியை நெருங்கிவிடுவோம் என்று சொல்கிறார்கள் விசாரணை குழுவில் உள்ள அதிகாரிகள்.
விவாதப் பொருளான சுவாதி
சுவாதி கொலை இன்றைக்கு உள்ளூர் சேனல் முதல் உலகச் சேனல் வரை விவாதப் பொருளாகி விட்டது. தமிழக போலீசின் வீர பராக்கிராமங்களை பற்றி வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. குற்றவாளியை பிடித்தால் மட்டுமே சென்னை காவல்துறையின் மீது படிந்த கறை துடைக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
No comments :
Post a Comment