திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டதால் காஷ்மேரா படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதாகவும், அதனால், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் செய்ததாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாயின.
அதனை தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. எனினும் இந்தப் பிரச்சனை நீருபூத்த நெருப்பாகவே உள்ளது.
தமிழ் திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்த போதெல்லாம் அதில் கணிசமான பங்கு பெப்சி தொழிலாளர்களுக்கு இருந்துள்ளது. அவர்களின் அராஜகமாகன கோரிக்கைகள்தான் வேலை நிறுத்தத்திற்கு பலநேரம் காரணமாக இருந்துள்ளன.
இயக்கம், கலை இயக்கம், கேமரா போன்ற கலைப் பிரிவுகளில் பணிபுரிகிறவர்களுக்கு - அதாவது உதவி இயக்குனர்கள், உதவி கேமராமேன்களுக்கு பணி உத்தரவாதமோ, சம்பள உத்தரவாதமோ கிடையாது. ஆனால், லைட்பாய் தொடங்கி உடலுழைப்பு செலுத்தும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணி உத்தரவாதம், சம்பள உத்தரவாதம், பேட்டா போன்ற அனைத்து சலுகைகளும் உண்டு.
இவர்களுக்கு காலை டிபன், இரண்டு வேளை டீ, மதிய சாப்பாடு கண்டிப்பாக தர வேண்டும். ஆறு மணிக்கு மேல் என்றால் இரட்டை சம்பளம். காஸ்ட்யூம் டிசைனர் என்று ஒருவருக்கு சம்பளம் தந்து நாம் நியமித்திருப்போம். அவருடன் உதவியாளர்கள் என்று இரண்டு பேர் தினம் படப்பிடிப்புக்கு வருவார்கள். அவர்களுக்கும் டீ, டிபன், சாப்பாடு முதற்கொண்டு சம்பளம்வரை அனைத்தும் தர வேண்டும். அவர்கள் படப்பிடிப்புக்கு தேவையில்லை எனினும் வருவார்கள், சம்பளம் பெறுவார்கள். இதேபோல்தான் அனைத்து துறைகளிலும்.
நமக்கு தேவையான கார்களை நாம் வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. சங்கத்திலிருந்தே கார்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். கார் வாடகையுடன், டிரைவர் பேட்டா, டீ, டிபன், சாப்பாடு என்று அனைத்தும் தர வேண்டும். வெளியே ஒரு தொழிலாளி 500 ரூபாய்கள் வாங்கினால் சினிமாவில் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இதுதவிர அவருக்கான சாப்பாட்டு செலவுகள் தனி.
இவ்வளவு செலவளிக்கிறோம், எங்களுக்கு தேவையான நபர்கள் வேண்டும் என்றால் அதுவும் கிடைப்பதில்லை. அவர்கள் தரும் கார், அவர்கள் தரும் தொழிலாளியை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டும். இல்லையேல் தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக பணி செய்ய மாட்டார்கள். அப்படியொரு சம்பவம்தான் கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பிலும் நடந்ததாக சொல்லப்படுகிறது. பெப்சி தொழிலாளர்களில் சிலர் செய்த பிரச்சனையால் ஒருநாள் படப்பிடிப்பும் முடங்கியுள்ளது.
சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி தமிழ் திரையுலகில் தொழிலாளர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர். அவர்களை பகைத்துக் கொண்டால் படப்பிடிப்பு நடக்காது என்பதாலேயே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அனைத்தையும் சகித்து படம் தயாரித்து வருகின்றனர். விரைவில் அவர்களின் பொறுமை எல்லைக்கடக்கும் என்றார் தயாரிப்பு நிர்வாகி ஒருவர். இவர் 22 ஆண்டுகள் திரைப்படதுறையில் அனுபவம் பெற்றவர்.
படப்பிடிப்புக்கு தேவையில்லாத தொழிலாளர்களை அனுமதிக்காமல் இருந்தாலே படத்தின் பட்ஜெட்டில் பத்து முதல் இருபது சதவீதத்தை சேமிக்கலாம் என்கிறார் அவர். தொழிலாளர் பிரச்சனையை முன்னெடுக்கும் போதெல்லாம், நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது சுட்டிக் காட்டப்படுகிறது. மார்க்கெட் இருந்தால் மட்டுமே ஒரு ஹீரோவுக்கு சம்பளம். மார்க்கெட் இழந்தால் எதுவுமில்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு அப்படியில்லை. யார் படம் செய்தாலும் அவர்களை அழைத்தாக வேண்டும், சம்பளம் தந்தாக வேண்டும். தொழிலாளர்களுக்கும், நடிகர்களுக்குமான இந்த வேறுபாட்டை தொழிலாளர்களை தூக்கிப் பிடிப்பவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
தொழிலாளர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமானால் அது வேலைநிறுத்தத்தை நோக்கியே செல்லும். அந்த அபாயத்தை தவிர்க்க வேண்டியவர்கள் தொழிலாளர்களும், அவர்களின் சங்கங்களும்தான்.
No comments :
Post a Comment