விமர்சித்தவருக்கு வீட்டை திறந்து காட்டிய அனுராக் காஷ்யப் என்ற சினிமா ராட்சஸன்

Share this :
No comments


அனுராக் காஷ்யபின் படங்கள் பலருக்கும் பிடிக்காமலிருக்கலாம். அப்செல்யூட் வோட்காவுடன் அவர் பேட்டியளித்ததற்கு முகத்தை சுழித்திருக்கலாம். மனைவி கல்கி கோச்சலினை விவாகரத்து செய்தது விமர்சிக்கப்பட்டிருக்கலாம்.

இன்னும் பல்வேறு விஷயங்களில் அனுராக் காஷ்யப் மனதுக்கு உகந்த மனிதராக தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், ஒரு சிறந்த சினிமா ரசிகர் என்ற முறையில் அனுராக் காஷ்யபை யாரும் நிராகரிக்க முடியாது. அவரளவுக்கு வெறி பிடித்த சினிமா ரசிகர்கள் உலக அளவிலேயே குறைவுதான்.

அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்த, உத்தா பஞ்சாப் படம் திரையரங்கில் வெளியாகும் முன் திருட்டு டிவிடி வெளியானது. அது குறித்து இணையத்தில் ஒரு குறிப்பை எழுதினார் அனுராக். அதில், நான் இதுவரை எந்தப் படத்தையும் இணையத்தில் திருட்டுத்தனமாக தரவிறக்கி பார்த்ததோ, பைரேட்டட் டிவிடியில் படங்கள் பார்த்ததோ இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், உத்தா பஞ்சாப் படத்தையும் திருட்டு டிவிடியிலோ, இணையத்திலோ திருட்டுத்தனமாக பார்க்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அனுராக் காஷ்யபின் அந்த குறிப்பை யாரும் நம்பத் தயாராக இல்லை. சும்மா கதை விடாதீங்க. எல்லோரும் பைரசியை வெறுக்கத்தான் செய்றோம். ஆனா, ஒருகட்டத்தில் அதை செய்யவும் செய்றோம். தயவுசெய்து நீங்க மட்டும் அப்படி இல்லைன்னு சொல்லாதீங்க. நீங்க ஒரு ஹைப்போகிரைட் என்று விடாது கருப்பு போல் அனுராக்
காஷ்யபின் குறிப்புக்கு தீரஜ் என்பவர் பதிலளித்திருந்தார். அதற்கு அனுராக், இந்த நாட்டிலேயே என்னிடம்தான் ஒரிஜினல் படங்கள் உள்ள மிகப்பெரிய பர்சனல் ஃபிலிம் லைஃப்ரரி உள்ளது என்று பதிலளித்திருந்தார். தீரஜுக்கு அதில் நம்பிக்கையில்லாமல் போக, வேணும்னா என்னோட வீட்டுக்கு வந்தே பார்க்கலாம் என்று அனுராக் அழைப்பு விடுத்தார். தீரஜும் அவர் வீட்டுக்கு சென்றார்.

அனுராக் காஷ்யபின் டிவிடிகள் அடங்கிய லைஃப்ரரியை பார்த்து அசந்து போன தீரஜ் அதனை படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தாளு சாதாரண ஆளில்லை, அவர் வச்சிருக்கிறதில் 70 சதவீத படங்கள் பத்தி எனக்கு தெரியவே தெரியாது. செம கலெக்ஷன், இதேபோல நான் பார்த்ததேயில்லை என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

அனுராக்கின் படங்கள் இருக்கும் அறை முழுக்க டிவிடிகளே பிதுங்கிக் கொண்டு இருக்கின்றன. அவர் சொன்னது போல் அத்தனையும் ஒரிஜினல் டிவிடிகள் ப்ளூரே டிஸ்க்குகள். அவரை மாதிரி ஒரு சினிமா ரசிகன் இருக்கவே வாய்ப்பில்லை என்று அனுராக்கை விமர்சித்த தீரஜ் அவரது லைஃப்ரரியை பார்த்தபின் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

முகம் தெரியாத ஒருவரது கமெண்டுக்காக வீட்டிற்கு அழைத்து தனது பர்சனல் லைஃப்ரரியை திறந்து காட்டும் அளவுக்கு திறந்த மனதுடனும், உண்மையாகவும் இருக்க அனுராக் காஷ்யபை போல் ஒருசிலரால் மட்டுமே முடியும்.

சினிமா சிலருக்கு மதம், சிலருக்கு ஃபேஷன், சிலருக்கு பைத்தியம். அனுராக் காஷ்யபுக்கு இவை எல்லாவற்றுக்கும் மேலே.

No comments :

Post a Comment