பா.ஜ.க. தலைவர் அத்வானியை பைப் குண்டு மூலம் கொல்ல முயன்ற குற்றவாளியின் புகைப்படம் சென்னை நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் உலவிவரும் தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சுவாதி கொலை தொடர்பாக முதலில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஒருவாரமாக பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுவாதியின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.
இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளி பற்றி துப்பு துலங்கிவருவதாக கூறப்பட்டது. கொலையாளியை போலீசார் நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், இந்த விசாரணையின் முடிவில் போலீசாரால் கொலையாளியை இன்னும் நெருங்க முடியாத நிலையே இருந்து வருகிறது. சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் கொலையாளி யார்? என்பது பற்றிய எந்தவித உறுதியான தடயமும் சிக்காத நிலையில், கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோலவே போலீசாரின் நிலைமை உள்ளது.
இந்நிலையில், நேற்றிலிருந்து ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவை நகருக்கு வந்தபோது பைப் வெடிகுண்டின் மூலம் அவரை கொல்ல முயன்ற வழக்கில் மூன்றுபேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் உள்ளார்களா? அல்லது, ஜாமினில் வெளியேவந்து வழக்கை சந்தித்து கொண்டிருக்கிறார்களா? என்பது தொடர்பான உடனடி தகவலை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை.
ஆனால், கோவை பைப் வெடிகுண்டு வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிலால் மாலிக் என்பவரின் புகைப்படம், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதியை கொன்ற கொலையாளியின் புகைப்படமாக சித்தரிக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலாகி வருகிறது.
இப்போதெல்லாம், ‘சட்டம் தனது கடமையை செய்யட்டும்’ என காத்திருக்கும் மனப்பான்மையும், பொறுப்புணர்வும், பொறுமையும் நம்மில் பலருக்கு இல்லை.
இந்த நிலையில், சுவாதியை கொன்றவர் என்று இன்னொரு நபரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களின் மூலம் இதுபோல் தவறான முறையில் பரவி வருவது நச்சு பிரச்சாரத்துக்கு இணையானதாகும்.
சுவாதி கொல்லப்பட்ட விதம் தொடர்பாக கொதித்துப்போய் இருப்பவர்களில் சிலர், தற்போது பரவிவரும் இந்த புகைப்படத்தில் காணப்படும் நபரை வெளியில் எங்காவது பார்த்து விட்டால் உணர்ச்சிவசப்பட்டு அவரை அடித்தே கொல்லவும் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே, நல்லவர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் மூலம் அந்த புகைப்படத்துக்கு இணையாக இந்த செய்தியும் வேகமாக பரவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நோக்கம் நமது வாசகர்களின் மூலம் நல்லபலனை அளிக்கும் என ‘மாலைமலர் டாட்காம்’ நம்புகிறது.
No comments :
Post a Comment