மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்
மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் திரைத் சோனாவால். இவன், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்தான். இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியர் ரேபா கலிதாவிடம் புகார் கூறினார்.
இதையடுத்து ஆசிரியர் ரேபா கலிதா மாணவனை அழைத்து விசாரித்தார். கடும் கோபத்துடன் இருந்த அவர், மாணவனை பிரம்பால் சரமாரியாக அடித்தார். 2 பிரம்புகள் உடைந்து விட்ட நிலையிலும் தொடர்ந்து அடி விழுந்தது. இதில், அந்த மாணவன் படுகாயம் அடைந்தான்.
அவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நிலைமை மோசம் ஆனதால் திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திரைத் சோனாவால் உயிர் இழந்தான்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் தெரிவிக்கும் போது மாணவியை கேலி செய்ததால் தான் ஆசிரியர் மாணவனை தாக்கினாரா? என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் ஆசிரியர் அடித்ததால்தான் மாணவன் இறந்தானா? என்பதும் உறுதியாக தெரியவில்லை என்றும் கூறினார்கள். மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்ததற்கு பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Labels:
others
No comments :
Post a Comment