4 பெண்கள் கொலை வழக்கு... ‘கொலையாளியைத் தூக்கில் போடுங்கள்’... பாண்டியம்மாளின் தந்தை ஆவேசம்

Share this :
No comments

சென்னை: தனது மகள் மற்றும் மூன்று பேத்திகளைக் கொலை செய்த சின்னராஜைத் தூக்கில் போட வேண்டும் என கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் இரண்டாவது கணவரால் பாண்டியம்மாள் என்ற பெண்ணும், அவரது மூன்று மகள்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பூட்டிய வீட்டில் இருந்து அழுகிய நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டது. பின்னர் சென்னை ராயப்பேட்டையில் அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோருடைய உடல்களை பெற்றுக்கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையிருப்பு கிராமத்தில் இருந்து பாண்டியம்மாளின் தந்தை சின்னையா (65) சென்னை வந்திருந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பின் 4 பேரின் உடல்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை சொந்த ஊர் கொண்டு செல்ல விரும்பாத சின்னையா, போலீசார் உதவியுடன் சென்னை ஐஸ் ஹவுசில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்தார்.

அப்போது அவர், ‘தனது மகள் மற்றும் மூன்று பேத்திகளின் வாழ்வைச் சிதைத்த சின்னராஜூவைத் தூக்கில் போட வேண்டும்' என கண்ணீருடன் கூறினார். 

மேலும், பாண்டியம்மாளின் முதல் கணவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாகவும், இதனால் மனமுடைந்த பாண்டியம்மாள் பேத்திகளை அழைத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டதாகவும், சமீபத்தில் தான் அவர்கள் சென்னையில் சின்னராஜுவுடன் இருப்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மகளின் இருப்பிடம் தெரிந்ததைத் தொடர்ந்து அவர்களை கடந்த 19ம் தேதி சின்னையா தனது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பாண்டியம்மாள் மகிழ்ச்சியுடன் இருந்ததால், மகள் சந்தோசமாக வாழட்டும் என அவர் கருதியுள்ளார்.

ஆனால், ஒரே வாரத்தில் இப்படி அவர்களது வாழ்க்கை முடிந்து போகும் என எதிர்பார்க்கவில்லை என அவர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.



No comments :

Post a Comment