பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் மீது வழக்கு: சென்னையில் போலீஸ் அதிரடி நடவடிக்கை

Share this :
No comments

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

புகை பிடிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே தொற்று நோய் போல பரவி வருகிறது. ஒருவரை பார்த்து ஒருவர், அவரை பார்த்து இன்னொருவர் என பலரும் புகை பழக்கம் மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்.

குறிப்பாக 8-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் ஏற்படத் தொடங்கி விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்படி 13 வயதில் இருந்தே அதுபோன்ற இளைஞர்கள் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

பள்ளி மாணவர்களிடையே புற்றுநோய் போல வேகமாக பரவிவரும் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அதே நேரத்தில் பொது இடங்களில் புகை பிடிக்கும் பலரால், புகைபழக்கம் இல்லாதவர்களுக்கு தீங்கு ஏற்படுகிறது. புகை பிடிக்கும் ஒருவரின் அருகில் நிற்பவர்களும் சிகரெட் புகையால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த சட்ட விதிகளில் இதுபோன்ற அம்சங்கள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன.

இந்த தடைச்சட்டத்தின்படி, பள்ளிக்கூடத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது.

இதனை பின்பற்றாத கடைக்காரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உளளது. ஆனால் இந்த நடைமுறைகளை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சரத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் ஒரு டீக்கடையில் விதிமுறைகளை மீறி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும், அங்கு புகை பிடிப்பவர்களால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை அதிகாரிகள் யாரும் சரியாக அமல்படுத்துவதில்லை. எனவே அந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், பொது இடத்தில் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவது பற்றியும் கவலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை குறிப்பிட்டு அவர் கருத்துக்களை தெரிவித்தார். ஆண்டுக்கு 7 லட்சம் பேர் வரை புகையிலை பழக்கத்தால் உயிர் இழக்கின்றனர் என்று கூறிய அவர் 15 வயதில் இருந்து 17 வயதுக்குட்பட்டவர்களில் 44 லட்சம் பேர் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

இந்த மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறேன் என தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் கூட்ட அரங்குகள், ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக அறிக்கையை தமிழக அரசு வருகிற 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இதையடுத்து சென்னை மாநகர போலீசாரும், மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகளும் உடனடியாக களத்தில் இறங்கினர்.

நேற்று காலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே பொது இடங்களில் சிகரெட் பிடித்தவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்தனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 355 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சென்னையில் இன்றும் 2-வது நாளாக பொது இடத்தில் சிகரெட் பிடித்தவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். இன்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையிலும், அனைத்து பகுதிகளிலும் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கண்காணிக்க போலீசாரும், சுகாதார துறையினரும் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வருகிற 19-ந்தேதி வரை பொது இடத்தில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது தொடர்ந்து வழக்குப் பதிவு செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர். பின்னர் 20-ந்தேதி அதுதொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதேபோல தமிழகம் முழுவதும் பொது இடத்தில் புகை பிடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடத்தில் புகை பிடித்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் கூறும்போது, “ரெயில் நிலையம், பஸ் நிலையம், தியேட்டர், அரசு அலுவலகம் போன்ற பொது இடங்களில் புகை பிடிப்பது குற்றமாகும்.

பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்கு பதிவு செய்யுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என்றார்.

நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி நெல்லை சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராம்கணேஷ் கூறும்போது, “பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டார சுகாதார ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சமீப காலமாக இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பொது இடத்தில் புகைபிடித்த பலரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இன்று முதல் இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

கோவையில் இன்று மாநகர பகுதி முழுவதும் ரோந்து சென்ற போலீசார் பள்ளி, ஆஸ்பத்திரிகள் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து துணை கமிஷனர் லட்சுமி கூறும்போது, “கோவையில் இன்று முதல் 3 நாட்கள் போலீசார் இது தொடர்பாக தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

No comments :

Post a Comment