பக்தர்களைக் காக்கும் பஞ்சவடி ஆஞ்சநேயர் வழிபாடு

Share this :
No comments

புதுச்சேரி- திண்டிவனம் வழியில் 10 கி.மீ.தொலைவில் உள்ளது பஞ்சவடி. இத்தலத்தில் அனுமன் ஜெயமங்கள அனுமனாக பஞ்ச முகங்களோடு அருள்கிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம்; ஹயக்கிரீவரின் மகிமையால் அறிவாற்றல், ஆன்மிக பலம்; வராகரின் ஆசியால் மனத்துணிவு; கருடனின் அன்பால் நஞ்சு ஆபத்தின்மை; ஆஞ்சநேயர் கருணையால் மன அமைதி, சகல சௌபாக்கியம் கிடைக்கும். ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை ஆயுதபாணியாக மறுநாள் போருக்கு வருமாறு சொன்னார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்யவே விரும்பினான். மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனின்துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் எச்சரித்தார். மயில் ராவணனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர்,வராகர், கருடன் ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இந்த அனுமனுக்கு அபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம்வரைஅதன் ஒலி கேட்கிறது! பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. சந்தன மரத்தால் செய்யப்பட்ட ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. தன்னையே தான் கிரிவலமாக… சென்னை அருகே, புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. இங்குள்ள மலையைச் சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம். மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சந்நதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவகிரக சந்நதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் சாளக் கிராமத்தால் ஆனவர். இவருக்கு எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார். வீர ஆஞ்சநேயர், வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் தரையில் படாமல் உயர்த்தி, பறப்பதற்குத் தயாரானவர்போல் அமைந்துள்ளார். அவரது நாபிக் கமலத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. தலைக்கு மேல் தூக்கப்பட்ட வாலில் மணி கட்டப்பட்டிருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி(நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் ‘பரிவேட்டை’ தலமாகவும் இத்தலம் உள்ளது. இந்த வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும்இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் வருவதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

No comments :

Post a Comment