Indian Hercules Manohar Aich Dies At 102

Share this :
No comments


கொல்கத்தா: முகமது அலியின் மறைவால் உலக குத்துச் சண்டை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் ஒரு ஜாம்பவான் தனது முடிவை எட்டியுள்ளார். அவர்தான் பாக்கெட் ஹெர்குலிஸ் என செல்லமாக அழைக்கப்படும் மனோகர் அய்ச். 102 வயதான மனோகர் அய்ச், பாடிபில்டிங்கில் வரலாறு படைத்த இந்தியர் ஆவார். மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அய்ச் என்பது அத்தனை இந்தியர்களுக்கும் பெருமை தருவதாகும். கொல்கத்தாவின் டம்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார் அய்ச்.

கடந்த 15 நாட்களாகவே அவரது உடல் நிலைமோசமாக இருந்து வந்தது. திரவ உணவுகளை மட்டுமே அவர் எடுத்து வந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 1914ம் ஆண்டு பிறந்த அய்ச், கடந்த மார்ச் 17ம் தேதிதான் தனது 102வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயது முதல் பாடிபில்பிடிங்

மரணமடைந்த அய்ச்சுக்கு 2 மகன்களும், 2 மகள்களும், அவர்கள் மூலமாக ஏராளமான பேரப் பிள்ளைகளும் உள்ளனர். 12 வயதிலேயே உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டாராம் அய்ச்.

36 வயதில் மிஸ்டர் ஹெர்குலிஸ்

1950ம் ஆண்டு தனது 36வது வயதில் மிஸ்டர் ஹெர்குலிஸ் பட்டத்தை வென்றார் அய்ச். 1951ல் நடந்த மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் 2வது இடம் பிடித்தார். ஆனால் 1952ம் ஆண்டு நடந்த மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் அட்டகாசமாக வெற்றி பெற்று அசத்தினார். 1955 மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் 3வது இடம் பிடித்தார்.

89 வயதிலும் அசத்தல்

1960ல் நடந்த போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 46 ஆகும். கடைசியாக 2003ம் ஆண்டு தனது 89வது வயதில் பாடிபில்டிங் காட்சியில் கலந்து கொண்டு அசத்தினார் அய்ச்.

ஜோதிபாசு வந்த அதே ஆண்டில்

1952ம் ஆண்டு அவர் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்த அதே ஆண்டில்தான் மறைந்த ஜோதிபாசு மேற்கு வங்க சட்டசபையில் முதல் முறையாக எம்.எல்.ஏவாக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வரலாறுகளோடு சேர்ந்து இன்னொரு வரலாறாக வளர்ந்தார் அய்ச்.

இளநீர் வியாபாரி

ஒரு காலத்தில் பாலிவுட் நடிகர்கள் மீது மட்டுமே இருந்து வந்த கவர்ச்சிப் பார்வையை தன் பக்கமாக ஈர்த்த பெருமையும் அய்ச்சுக்கு உண்டு. இவர் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகுதான் இந்தியாவிலும் பாடி பில்டிங் பிரபலமானது. சாதாரண இளநீர் வியாபாரியாக ஆரம்ப காலத்தில் இருந்தவர் அய்ச். சியால்டா ரயில் நிலையத்தில் இளநீர் விற்று வந்தார். அதன் பிறகுதான் பாடிபில்டிங்கில் ஈர்ப்பு வந்து அதில் நுழைந்தார். தீவிர தேகப் பயிற்சியில் குதித்தார். இத்தனைக்கும் இவர் வெறும் நான்கரை அடி உயரம்தான். அதனால்தான் இவருக்கு பாக்கெட் ஹெர்குலிஸ் என்ற பெயர் வந்தது.

வெள்ளையருக்கு விட்ட பளார்

சுதந்திரப் போராட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார் அய்ச். 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்த சமயம். இவர் கொல்கத்தாவில் உள்ள ராயல் இந்தியன் ஏர்போர்ஸ் நிலையத்தில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது வெள்ளையர் இன அதிகாரி ஒருவர் இவரிடம் முரட்டுத்தனமாக பேச பளார் என அறைந்து விட்டாராம் அய்ச். அய்ச்சுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு.. அது.. பாகுபலி!

No comments :

Post a Comment