சென்னை: இறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக, இறைவி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படத்தில், தயாரிப்பாளர்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகளை வைத்திருப்பதாக சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவ படத்தைப் பார்த்து விட்டு முடிவு செய்வதாக கூறியிருந்தனர்.
இறைவி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா
இறைவியில் படத்தை எடுத்து விட்டு அதனை வெளியிட முடியாமல் தவிக்கும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளரால் படம் தாமதமாவது போல காட்சிகளை அமைத்திருக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ''காட்சிப்படுத்துதல் முக்கியம் என்பதைவிடவும் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்'' என்று அறிவுரை கூறியிருந்தார்.
தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர்கள் மத்தியில் இந்த செய்தி வேகமாகப் பரவியதால் இப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றை இறைவியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான் ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். நேற்று ஆர்கேவி தியேட்டரில் சுமார் 150 க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் இப்படத்தைப் பார்த்தனர்.
நடவடிக்கை
கார்த்திக் சுப்புராஜ் விவகாரத்தில் முடிவை நாளை அறிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. அதே நேரம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதகாகக் கூறியிருக்கிறார். மறுபக்கம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநர் சங்கத்தில் ஆதரவு கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment