'எத்தனை சுவாதிகள் கொல்லப்பட்டாலும், ரயில்வே இப்படித்தான்!' -கொதிக்கும் ரயில்வே ஊழியர் சங்கம்

Share this :
No comments


நுங்கம்பாக்கத்தில் ஐ.டி பெண் ஊழியர் சுவாதி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ' இன்னும் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும், ரயில்வே துறை கவலைப்படப் போவதில்லை' எனக் கொந்தளிக்கின்றனர் ரயில்வே ஊழியர் சங்கத்தினர்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துகளில் மிக முக்கியமானது ரயில்வே. கடந்த ஜுன் 24-ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி. இதற்கு முன்னதாக, 2014ம் ஆண்டு மே மாதம் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கௌகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் பலியானார். அப்போதும் ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

ரயில்வே துறையும் வழக்கம்போல, ' அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்' என அறிவித்தது. அதன்பின்னர் இதைப் பற்றி அவர்கள் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. நுங்கம்பாக்கம் சம்பவத்திற்குப் பிறகு, " 2016ம் ஆண்டு இறுதிக்குள் 84 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என உறுதிமொழி அளித்துள்ளனர் ரயில்வே அதிகாரிகள்.

'இவர்களின் உறுதிமொழி காப்பாற்றப்படுமா?' என்ற கேள்வியை, தக்சின ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின்(டி.ஆர்.இ.யூ) செயல் தலைவர் இளங்கோவனிடம் கேட்டோம். " பயணிகளின் நலனில் ரயில்வே அமைச்சகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ரயில்வே பட்ஜெட்டில், பிளாட்பார்ம்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது, ரயில்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பது போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

தென்னக ரயில்வேயில் மட்டும் 500 இடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் 19 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டால், 24 மணி நேரமும் கேமராக்களைக் கண்காணிப்பதற்கு போதிய காவலர்கள் வேண்டும். ரயில் நிலையங்களில் எதாவது பிரச்னை ஏற்பட்டால், சம்பவ இடத்திற்கு செல்கின்ற அளவுக்காவது போலீஸார் தேவைப்படுகின்றனர். நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம்பெண் இறந்து, 2 மணி நேரம் கழித்துத்தான் எழும்பூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். அவர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. ரயில்வே போலீஸாருக்கு கோர்ட், வழக்கு என அலையவே நேரம் சரியாக இருக்கிறது.

ரயில் நிலையத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ரயில்வே போலீஸாருக்கு இருக்கிறது. இவர்களுக்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் தருகின்றன. இந்த நிதியில் மத்திய அரசின் பங்கு 3,600 கோடியாக இருந்தது. தற்போது 584 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது. இந்தச் சுமையை மாநில அரசின் தலையில் கட்டவே மத்திய அரசு விரும்புகிறது. அரசின் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பயணிகளின் உயிரோடு விளையாடுகிறது ரயில்வே அமைச்சகம்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, 'எஸ் கார்டு' போலீஸார் ரயில்களில் பயணிக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. பெரும்பாலான ரயில்களில் 'எஸ் கார்டு' போலீஸார் பயணிப்பதே இல்லை. இப்போது அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துகிறோம் என்று சொல்கிறார்கள். நல்ல விஷயம். 24 மணி நேரமும் கேமராவைக் கண்காணித்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றப் போவது யார்? ஆளே இல்லாத ரயில்வே போலீஸாரா?" என கொந்தளித்தார்.

' பயணிகளின் பாதுகாப்பு, பயணிகள் கையில்தான் இருக்கிறது' என சொல்லாமல் சொல்கிறதா ரயில்வே அமைச்சகம்?

No comments :

Post a Comment