மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன்களை வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனமே வசூலிக்கும்' என்ற தகவலால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் கல்வியாளர்கள். இந்நிலையில் ' அடியாட்களை வைத்து கடனை வசூலிக்கும் வேலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கிவிட்டதாக' கொந்தளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மிகப் பெரிய உதவியாக இருப்பது பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன்கள்தான். அந்தக் கடனை வங்கியில் இருந்து வாங்குவதற்குள் பெற்றோர்கள் சோர்ந்து விடுகின்றனர். ' இல்லாத ஆவணங்களை எடுத்து வரச் சொல்லி அலைக்கழிப்பது, கல்விக்கடனை தர மறுப்பது' என கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எழுந்த சர்ச்சை, தற்போது வரையில் தொடர்கிறது. கல்விக் கடன் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்நிலையில், ' இதுவரை கொடுத்துள்ள கல்விக் கடன்களை பாரத் ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத விலைக்கு விற்றுவிட்டதாக' வெளியான தகவலால் அதிர்ந்து போயிருக்கின்றனர் கல்வியாளர்களும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும். மேலும் அரசியல் கட்சிகளும், ' இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும்' என வலியுறுத்த தொடங்கியுள்ளன.
இதுகுறித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், " மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்காக பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்களை, இப்போது அந்த வங்கிகள் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, அப்படி கல்விக் கடன்களை 45 சதவீத விலையில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு விற்றுள்ளது. இப்போது இந்த நிறுவனம், கடனை வசூலிப்பதற்காக அடியாட்களை வைத்து மாணவர்களை மிரட்டி வருகிறது. இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இப்படி கல்விக் கடன்களை வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். ' மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்' என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த தமிழக முதலமைச்சர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இதைப்போல கேரள மாநிலத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், இதே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கல்விக் கடன்களை விற்பனை செய்தபோது, கேரள அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தியதை தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் புற்றீசல்போல பெருகிவரும் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை எந்தத் தரமும் இல்லாதவையாக உள்ள காரணத்தால், அங்கிருந்து படித்துப் பட்டம் பெற்ற லட்சக் கணக்கான பொறியியல் பட்டதாரிகள், தமது படிப்புக்குரிய வேலையைப் பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழில் கல்வியை முறைப்படுத்தி, அதன் தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கிய காரணத்தினாலேதான் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சுமார் 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, தமிழக அரசு இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கொந்தளித்தார்.
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
No comments :
Post a Comment