எல்பிஜி மானியம் ரத்து, பான்கார்டு முடக்கம்... வருமான வரி ஏய்ப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி!

Share this :
No comments


வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த வருடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது வருமான வரித்துறை. இந்த பட்டியலில் உள்ளவர்களின் பான் கார்டு எண் முடக்கம் செய்யப்படுவதோடு, அவர்களது சமையல் எரிவாயுக்கான மானியமும் ரத்து ஆகும் அளவு இந்த நடவடிக்கை நீண்டிருக்கிறது.

இனி இவர்கள் வங்கியில் புதியதாக கடன் பெற முடியாது. அதாவது வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு, பொதுத்துறை வங்கிகளில் கடன் மற்றும் வங்கிக் கணக்கு அடிப்படையில் இருக்கும் ஓவர் டிராஃப்ட் வசதி ரத்து செய்யப்படும் எனவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் கார்டு எண்ணை ரத்து செய்வதால், புதியதாக சொத்து வாங்கும்போது அதை பதிவு செய்ய முடியாது. மேலும் 'சிபில்' அமைப்புடன் இணைந்து, வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கவனித்து, வரி செலுத்தாமல் இருப்பவர்களின் சொத்துக்களை முடக்கவும் வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன் செலுத்தப்படாத இந்த வரித் தொகையானது சம்பந்தப்பட்டவரின் கடன் பாக்கியாக கருதப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

'சிபில்' அமைப்பு, கடன் வாங்குவோர் விவரம் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளது. மேலும் 'சிபில்' அமைப்பில் இருக்கும் விவரங்களின் அடிப்படையில், வரி செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்கை கண்டுபிடித்து எரிவாயு மானியத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.



கடந்த வருடம் 'name and shame ' என்ற பெயரில் ரூ.20 கோடிக்கு மேல் வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை பத்திரிக்கைகளில் வெளியிடும் திட்டத்தை வருமான வரித்துறை அறிவித்தது நினைவிருக்கலாம்.

வருமான வரித்துறை இவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க காரணம் என்ன என்பது குறித்து ஆடிட்டர் ஶ்ரீகாந்திடம் கேட்டோம்.

" வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக வருமான வரித்துறை வரி இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. பான் கார்டு எண் என்பது வருமான வரி செலுத்துபவர்களின் அடையாள எண் மட்டும்தான். ஆனால் இந்தியாவில் வங்கிக் கணக்கு துவங்க, டிடிஎஸ் திரும்ப பெற, பாஸ்போர்ட் பெற என பல்வேறு தேவைகளுக்காக பான் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இவர்கள் அனைவரும் வரி செலுத்துபவர்கள் என வருமான வரித்துறை நினைக்கிறது. ஆனால் உண்மையில் பான் கார்டு வைத்திருப்பவர்களில் பலருக்கு, அதனுடைய பயன் என்ன என்பதே தெரியாது. அவர்களை பொருத்தவரை அது ஒரு அடையாள அட்டை மட்டும்தான்.

மேலும் பான் கார்டு எண்ணை முடக்குவதால் பெரிய பலன் இருக்காது. ஏனெனில் பலரும் ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு அடிப்படையில்தான் எல்பிஜி மானியம் பெறுகிறார்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு பதிலாக வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். பான் கார்டு வைத்திருப்பவர்களை வரி கட்ட உத்தரவிடலாம். இப்படி செய்யும் போது பான் கார்டு வைத்திருந்தும் வருமான வரி வரம்புக்குள் வராதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரிந்துவிடும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு காரணங்களுக்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் வரி செலுத்துபவர்களின் அடிப்படையில் அந்த நாடு வளர்ந்த நாடா அல்லது வளரும் நாடா என்பது வகைப்படுத்தப்படுகிறது. வளரும் நாடு எனில் வருமான வரி செலுத்துபவரின் எண்ணிக்கை இவ்வளவு எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என சர்வதேச நிதியம் வரையறை வைத்துள்ளது.

அந்த எண்ணிக்கையை அடைவதற்காகதான் இந்த நடவடிக்கைகள். அதேபோல மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்களால் அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதில் எரிவாயு மானியம் என்பது மிக அதிக அளவில் உள்ளது. இதை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் வரி செலுத்தாதவர்களுக்கு மானியம் இல்லை என்பது” என்றார்.



சர்வதேச அமைப்புகளிடமிருந்து இந்தியா அதிக அளவில் கடன் பெறுகிறது. அதை இந்தியா எப்படி செலவிடுகிறது என்பதில் அந்த அமைப்புகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

அதாவது வளர்ந்த நாடாக உள்ள நிலையில், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இப்படி இருக்கையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்த இந்தியாவிற்கு என்ன நிதி ஆதாரம் இருக்க முடியும் என சர்வதேச அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன. அதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான், வரி செலுத்துபவரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்திய வருமான வரித்துறை இப்படி கறார் முகம் காட்டுகிறது என்கிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வரி செலுத்தாமல் இருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதத்தினர்தான் வரி செலுத்துகிறார்கள்.

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு வங்கிக் கணக்கு துவக்குவதிலிருந்து பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்துக்கும் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. மேலும் 200 ரூபாய் கொடுத்தால் பான் கார்டை எளிதாகப் பெறமுடியும். பான்கார்டு வைத்திருப்பவர்களில் பலர் வருமான வரி வரம்புக்குள் வருவதே இல்லை. ஆனால் பலர் தங்களின் வருமானத்துக்கு சரியாக வரி செலுத்தாமல் இருக்கிறார்கள். இவர்களின் மீதான நடவடிக்கையில் சிக்கி சாதாரண மனிதன் அவதிப்படுகிறான். எனவே வருமான வரித்துறை, வரி வசூல் தொகையை உயர்த்த, சரியான நபர்களை அடையாளங்கண்டு நடவடிக்கை எடுப்பதுதான் நல்ல தீர்வாக இருக்கும்.

பான் கார்டை முடக்குவதால் எத்தகைய சிக்கல்களை சந்திக்க வேண்டும் என்பது குறித்து ஆடிட்டர் சத்திய நாராயணனிடம் பேசினோம்.

“வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய பான் கார்டு தேவை. மூத்த குடிமக்கள் வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கான வட்டி வருமானத்துக்குக்கும் சேர்த்து வரி செலுத்த வேண்டியிருக்கும். இதை தவிர்க்கும் விதமாக 15H/15G படிவத்தை கொடுத்திருப்பார்கள். பான் கார்டு வைத்திருப்பவர்கள்தான் இந்த படிவங்களை கொடுக்க முடியும். இதை கவனிக்கும் வருமான வரித்துறை, ஏன் இந்த வருமானத்துக்கு வரி செலுத்தவில்லை என நினைக்கிறது. ஆனால் உண்மையில் அந்த நபரின் மொத்த வருமானமானது வரி செலுத்தும் வரம்புக்குள் இருக்க வாய்ப்புள்ளது.

பான் கார்டு எண் முடக்கத்துக்குள்ளாகும் நபர், வங்கியில் புதிய கணக்கு கூட துவங்க முடியாது. வேறு எங்கும் அந்த பான் எண்ணை பயன்படுத்த முடியாது. எந்த இடத்தில் பான் கார்டு எண்ணை பதிவு செய்தாலும் அது தவறானது என சுட்டிக்காட்டும். பான் கார்டு முடக்கப்பட்டவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று தனது ஆண்டு வருமானம் வரி வரம்புக்கு கீழ் உள்ளது' என கடிதம் தரவேண்டியிருக்கும்.

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் எனில், அந்த சமயத்தில் வரி வரம்புக்கு கீழ் இருக்கிறீர்கள் என தகவல் கிடைக்கும். இதை வருமான வரித் துறையில் ஒப்படைத்து, மீண்டும் பான் கார்டு எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

No comments :

Post a Comment