'வாட்ஸ் அப்' பயன்பாடு..! பெண்களுக்கு நீதிபதியின் எச்சரிக்கை அறிவுரை
‘வாட்ஸ் அப்’பில் புகைப்படங்களை பரிமாற்றம் செய்வதில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த அஜித் என்ற மோகன் என்பவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், "16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது மட்டும் அல்லாமல், மனுதாரர் செல்போனில் படமும் எடுத்துள்ளார். தன் நண்பர்களுடனும் சேர்ந்து இருக்கா விட்டால், அந்த படத்தை ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டு விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். அந்த சிறுமி எப்படியோ இந்த கும்பலிடம் இருந்து தப்பித்து, பொதுமக்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு வந்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். தனக்கு நடந்த துயரத்தை, குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் தன்மையை பார்க்கும்போது, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதேநேரம், தகவல் தொழில்நுட்ப குற்றங்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த ‘வாட்ஸ் அப்பில்‘ நல்ல தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரரை போல தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி என்பது ஒரு வரமாக இருக்கவேண்டுமே தவிர, மனித இனத்தின் அமைதியை கெடுக்கும், நஞ்சாக இருக்கக்கூடாது.
எனவே, ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவோர், குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெண்கள் தங்களது புகைப்படத்தை ‘வாட்ஸ் அப்’பின் முகப்பு படமாக வைப்பது, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற செயல்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், வந்த பின் காப்பதை விட, வரும் முன் காப்பது சிறந்தது" என்று கூறியுள்ளார்.
Labels:
News
No comments :
Post a Comment