நமது சமையல்றையில் உள்ள கலர்கலரான ஒவ்வொரு பொருட்களும் தனி குணம் உண்டு. கடுகு, மஞ்சள், குங்குமப்பூ வில் தொடங்கி, பெருங்காயம் வரை அவற்றின் நிறங்களும், குணங்களும் வேறுவேறானவை. மற்ற நாட்டினரை விட இந்தியாவில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்களை பெற்றுள்ளது என பெருமைப் படலாம்.
இப்போது மிக முக்கியமாக நாம் பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
மஞ்சள் : மஞ்சள் மிகப்பழமையான மசாலா பொருள். இஞ்சி வகையை சேர்ந்தது. ஆயிரம் வருடத்திற்கும் மேலாக ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. சாம்பார்,பொரியல் தொடங்கி சகலத்திற்கும் மஞ்சள் இல்லாமல் எந்த காரவகை உணவுகளுமே நம் இந்தியாவில் தயாரிப்பதில்லை.
அப்படிப்பட்ட மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, ஜலதோஷம், வாய்வு, இருமல், என நிறைய வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதோடு, சருமத்தில் ஏற்படும் தொற்று, புண், படை, சரும அலர்ஜி என நிறைய சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது.
மிளகு : மிளகு காரமான மசாலா பொருள். இது நம் இந்தியாவைப் போலவே, ஐரோப்பா நாட்டிலும் அதிகமாக உபயோகப்படுத்துவார்கள். இது உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது. கிருமி நாசினி, நோயெதிர்ப்பு திறனை தருகிறது. ஜீரணத்திற்கு, ஜலதோஷத்திற்கு, விஷமுறிவிற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
ஏலக்காய் : பச்சை நிறத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய மசாலா பொருள் ஏலக்காய். வாசனை பொருட்களின் ராணி என இது அழைக்கப்படுவதுண்டு. பாயசம், தேநீர் என நிறைய சமையலுக்கு இதனை உபயோகப்படுத்துவோம்.
இது நிறைய மருத்துவ பயன்களை நமக்குத் தருகிறது. முக்கியமாக, வாய்வு, ஜீரணம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், பசியின்மை போன்றவற்றை குணப்படுத்துகிறது. முக்கியமாய் புற்று நோயை எதிர்க்கிறது. குறிப்பாக சரும புற்று நோய் வராமல் தடுக்கிறது.
பட்டை : நீளமாய் குச்சி போன்ற உருவம்தான் பட்டையின் வடிவம். ஆனால் பயன்கள் ஏராளமானவை. இவை இதயத்திற்கு பலம் அளிக்கின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக டைப் 2 சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது. லுகீமியா என்ற ரத்தப் புற்று நோயை தடுக்கிறது. அந்த புற்று நோயின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு, புற்று நோய் செல்களை குறைத்து, மேலும் பரவாமல் இருக்க உதவுகிறது.
தினமும் காலையில் உணவு சாப்பிடும் முன்பு, 1 ஸ்பூன் பட்டைப்பொடியுடன், 1 ஸ்பூன் தேனை கலந்து சாப்பிட்டால் , ஆர்த்ரைடிஸ் நோய் கட்டுக்குள் வரும். 1 மாதத்தில் ஆர்த்ரைடிஸ் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
பெருங்காயம் : பெருங்காயம் மிக முக்கியமான மசாலா பொருள். அது இல்லாமால் சாம்பாரோ பொறியலோ முழுமையடைவது கிடையாது. கட்டிப்பெருங்காயமாகவும், தூளாகவும் பயன்படுத்துகிறோம். இருப்பினும் கட்டிப்பெருங்காயத்தை உபயோகிப்பது அதிக பலனைத் தரும். இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
வாய்வு பிடிப்பில் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது குடலின் வரும் புற்று நோயை தடுக்கும். முக்கியமாக மலக் குடல் புற்று நோயை வராமல் தடுக்கும்.
இன்னும் கணக்கிலடங்கா ஏராளமான மசாலா பொருட்களை நாம் உபயோகப்படுத்துகிறோம். அந்த காலங்களில் காரணம் இல்லாமல் எதையும் யாரும் பயன்படுத்தவில்லை.
ருசியோடு, ஆரோக்கியத்தையும் பார்த்து சமைத்தார்கள். நாம் நேரத்தை மிச்சப்படுத்த, ரெடிமிக்ஸ் கொண்டு எல்லாவற்றையும் சமைக்கிறோம். இதனால் இழப்பது நமது ஆரோக்கியத்தைதான். நேரத்தை காட்டிலும், ஆரோக்கியம் முக்கியமல்லவா?
No comments :
Post a Comment