முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்ததையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு பேரும் குற்றவாளி என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற மூன்று பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு சாதகமாக்கி அனைவரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூன் 1ம் தேதி நடந்த விசாரணையின்போது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவிப்பது குற்றமல்ல என்று நீதிபதிகள் பரபரப்பான கருத்தை தெரிவித்தனர். மேலும், சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனு செய்திருந்த நிறுவனங்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், சிக்னோரா என்டர்பிரைசஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ் லிமிட்டெட், மிடோ அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதிடுகையில், இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது சரியான நடவடிக்கைதான் என்று வாதிட்டார். ஜெயலலிதா தரப்பில் ஹரின் ராவல் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.
தற்போது ஜெயலலிதா வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூட அநேகமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments :
Post a Comment