சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க 10 அதிரடி திட்டங்களை மாநகர காவல்துறை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது. மேலும், பேருந்தில் பயணிக்கும் மாணவர்களை கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் போது மோதலில் ஈடுபடுவதோடு, அரிவாள், உருட்டுகட்டையுடன் தாக்குதலும் நடக்கிறது. பெண் பயணிகளை கிண்டல் செய்வது, தட்டிகேட்கும் பொதுமக்கள் மீது தாக்குதல், பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. மேலும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் தரப்பில் கூடுதல் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், அபய்குமார்சிங், வரதராஜூ போன்ற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் ஊழியர்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10 அதிரடி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம்:
* பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பஸ்களை ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், பஸ்களின் கூரை மீது ஏறிநின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
* கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.
* கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளை கண்டிப்பாக சோதனை செய்யவேண்டும்.
* கல்லூரிகளின் நுழைவுவாயில், மாணவர்கள் விடுதி, கேண்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
* கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
* வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம்.
* மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* பஸ்சில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
* வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பலாம்.
* மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
மேலும், சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், பிற்பகலில் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment