தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக நலன் கருதிய 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
பிரதமரிடம் முதல்வர் வழங்கிய கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் விபரம்:-
* இலங்கை வசம் உள்ள கட்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கட்சத் தீவு அந்தோனியார் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
* இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் 91 படகுகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஜிஎஸ்டி மசோதாவில் அதிமுக கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* நதிநீர் இணைப்பை சாத்தியமாக்க வேண்டும்.
* மாநில அரசுக்கு தர வேண்டிய தேவையான நிதியை உடனடியாக தர வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
* பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
* நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
* உணவு, தாணியங்கள் ஒதுக்கீட்டை குறைக்க கூடாது.
* கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
* தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்.
* ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, அனுமதி வழங்க வேண்டும்.
* தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களில் எயிம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.
* தமிழக அரசின் கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்.
* வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக சீர் செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், நிலுவையில் உள்ள வெள்ள நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். இந்த நிதி தொடர்பாக 2 மனுக்கள் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
* உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அனுமதிக்க வேண்டும்.
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* மருத்துவ நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாநில அரசை கட்டாயப்படுத்த கூடாது.
* கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
* மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.
போன்ற பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
No comments :
Post a Comment