சென்னையில் ஒரு செவ்வாய் கிரகவாசி!

Share this :
No comments


‘கிரேவிட்டி’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ வரிசையில் விண்வெளி வீரர்களை மையப்படுத்தி வெளிவந்த ‘மார்ஷியன்’ திரைப்படமும் உலகளவில் பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்யச் செல்லும் குழுவுக்கு நேரும் பிரச்னையும் அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. இப்படி மனிதர்களே வேற்று கிரகத்துக்கு சென்று பிரச்னையில் மாட்டிக்கொள்கின்றனர். ஒரு மாற்றத்துக்கு இந்த ஏலியன்கள் நம் கிரகத்தில் அதுவும் நம் சென்னையில் சிக்கினால் எப்படியிருக்கும்?

பறக்கும் தட்டில் ஒரு ஏலியன் குழு சென்னையை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்தில் இருந்து வருகிறது. தி.நகரில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் கடைக்காரர் ஒருவர் ‘சட்டை 200 ரூபாய்தான் சார், வா சார், வந்து பாரு சார்...’ எனக் குழுவில் கடைசியாக வந்துகொண்டிருந்த ஹீரோ ஏலியனைக் கடைக்குள் இழுத்துப் போடுகிறார். குழுவில் உள்ள மற்ற ஏலியன்களும் அது தெரியாமல் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே கவனிக்காமல் சென்று விடுகின்றன. பலமணி நேரத்துக்குப் பிறகு பறக்கும் தட்டை அடைந்த பின்புதான் அந்த ஏலியன்கள் மண்டையில் மணி அடிக்கிறது. ஹீரோ ஏலியனைத் தேடுவோம் என முயற்சி செய்கின்றன. ஆனால், சென்னையில் அட்ரஸ் தெரியாமல் திரிபவர்களுக்கு காக்கா பிரியாணி கொடுத்து கிட்னியைக் கழட்டி விடுவார்கள் என்பதை அறிந்து தேடுதல் முயற்சியைக் கைவிடுகின்றன. ஹீரோ ஏலியன் ஏதாவது தண்ணீர் லாரியில் அடிபட்டு இறந்திருக்கும் என முடிவு செய்கின்றன. தற்காலிமாக விண்வெளி நிலையத்துக்குத் திரும்பி விடுகின்றன.



அங்கே கடைக்காரரிடம் 200 ரூபாய் சட்டையை 180 ரூபாய்க்கு அடித்துப் பேசி வாங்கி, சந்தோஷத்துடன் பஜாரை விட்டு வெளியே வந்த ஏலியன், குழுவினர்களைக் காணவில்லை என்றதும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது. பறக்கும் தட்டு நின்ற இடத்தில் பானிபூரி கடைதான் இருக்கிறது. ஏலியனுக்குத் தலை சுர்ருங்குது. ‘சரி, கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் வருவாங்க, அதுவரைக்குமாவது எப்படியாவது உயிர் வாழணும்’னு ஹீரோ ஏலியன் மனசுக்குள்ள நினைக்குது. மதிய நேரம் ஆகிடுது, ஏலியனுக்கு வயிறு கியான்...கியான் என்கிறது. நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும்னு தேடுது. பிரியாணி அண்டாவில் கரண்டியை வைத்து தட்டுவதைப் பார்த்து ஏதோ இசைக்கருவி விற்கிறார்கள் போல எனக் கடையையும் கடந்து சென்று விடுகிறது. வழியில் ஒரு சிறுவன் ‘சோட்டா பீம்’ ஸ்டிக்கர்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘அண்ணே...ப்ளீஸ்ணே, வாங்கிக்கண்ணே... காலையில இருந்து சாப்பிடலை, இன்னும் போனி ஆகலை. பத்து ரூபா கொடுத்தா ஒரு டீ குடிச்சிக்குவேண்ணே...’ என ஏலியனைப் பின் தொடர்ந்து தொணத்தி எடுக்கிறான். கொலைப் பசியில் உள்ள ஏலியன் பத்து ரூபாய் கொடுத்து அந்த ஸ்டிக்கரை வாங்கித் தின்று விடுகிறது. உடனே அந்தச் சிறுவன் பயத்தில் ஓடி விடுகிறான். பின்னர் பல நாட்களுக்குப் பிறகு, ஏலியன் அந்தச் சிறுவனைப் பார்த்து ‘நான் உனக்கு காசு தரேன். எனக்கு ஸ்டிக்கர் தர்றியா’ என ஏலியன் பாஷையில் கேட்க, அந்தச் சிறுவன் பதிலுக்கு ‘ஐ டோன்ட் நோ இங்கிலீஷ்’ என்கிறான். இது சரிப்பட்டு வராது என ஏலியன் முக்காடைக் கழட்ட, அந்தக் கொடூரமான மூஞ்சியைப் பார்த்து சிறுவன் பயந்து ஸ்டிக்கர்களைக் கீழே போட்டுவிட்டு ஓடி விடுகிறான். அந்த ஸ்டிக்கர்களை எடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறது ஹீரோ ஏலியன். பின்னர் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் ஹீரோ ஏலியன் பனகல் பார்க் அருகில் பருத்திப்பால் குடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துக் குழுவில் இருந்த மற்ற ஏலியன்கள் அதிர்ச்சி அடைகின்றன. ஹீரோ ஏலியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பூமிக்கு மீண்டும் வருகின்றன.

மற்ற ஏலியன்கள் சென்னைக்கு வந்து ஹீரோ ஏலியனை சீரியஸாகத் தேடுகின்றன. அப்போது ஒருவர் ‘அண்ணே... ப்ளீஸ்ணே, வாங்கிக்கண்ணே... காலையில இருந்து சாப்பிடலை, இன்னும் போனி ஆகலை. பத்து ரூபா கொடுத்தா ஒரு டீ குடிச்சிக்குவேண்ணே...’ என்கிறார். அந்தக் குரலைக் கேட்டதும் தெரிந்து விடுகிறது, இது குழுவில் இருந்து தொலைந்து போன ஹீரோ ஏலியனேதான் என்று. ‘டேய், ஏலி... எங்கடா போன, என்னடா இது வேசம், வந்துருடா எங்ககூட...’ எனக் கதறுகிறார்கள் மற்ற ஏலியன்கள். அவர்களின் குடும்பப் பாட்டைப் பாடுகிறார்கள். ஆனால், ஹீரோ ஏலியன், ‘எனக்கு நம்ம செவ்வாயைவிட சென்னையை ரொம்பப் பிடிச்சிருக்கு. சென்னையைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி, படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி. இது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. மிரட்டுது என்னை. இருந்தும் விட்டுப்போக மனம் இல்லையே’ என்கிறது. மேலும் ‘இந்த ஊர்க்காரங்க செவ்வாய்க் கிழமை ஆச்சுனா விரதம்லாம் இருக்கிறாங்க. இதை நினைச்சு செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த நாம பெருமைப்பட்டுக்கணும்’ எனக் கண் கலங்குகிறது. மற்ற ஏலியன்களும் ‘சரிடா, நாங்களும் இங்கேயே உன்கூடவே இருந்துக்கிறோம்’ என்கின்றன. ஆனால், ஹீரோ ஏலியனோ, ‘இல்லை வேண்டாம். நீங்க நம்ம கிரகத்துக்கே போயிடுங்க. நான் இங்கே பெரிய ஆள் ஆகிட்டு, உங்களைக் கூப்பிடுறேன்’னு சொல்லுது. அப்புறமா ‘சரி போறதுக்கு முன்னாடி எல்லோரும் உங்க போட்டோவைக் கொடுத்துட்டுப் போங்க. சோட்டா பீம் ஸ்டிக்கரா வித்து போர் அடிக்குது, ஒரு சேஞ்சுக்கு ஏலியன் ஸ்டிக்கர் விக்கலாம்னு இருக்கேன்’னு சொல்லுது. படத்தை முடிக்கிறோம். கதையில கூட யாரையும் கஷ்டப்படுத்த விரும்பாதவன்தான் நம் ஊர்க்காரன்!

No comments :

Post a Comment