'நானாவது 45 லட்சம், அந்த எம்.எல்.ஏ ஒரு கோடி ரூபாய்..!'- ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அதிமுக எம்.எல்.ஏ

Share this :
No comments


தனது மகனுக்கு தமிழ்நாடு அரசுப் பேருந்தில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, பணம் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக, மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நாகராஜ் மீது சுசீலா என்ற பெண், விழுப்புரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதும், அது தொடர்பாக நடந்த செல்போன் உரையாடலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூரைச் சேர்ந்த சுசீலா என்பவர், இன்று விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ நாகராஜன், அரசுப் பேருந்தில் தனது மகனுக்கு ஒட்டுநர் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, மூன்றரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

இந்நிலையில், இதே விவகாரத்திற்காக அமைச்சர் நாகராஜிடம் விழுப்புரத்தைச் சேர்ந்த வக்கீல் தமிழ்மாறன் என்பவர், செல்போனில் பேசிய ஆடியோ ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

அதில் வக்கீல் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவர், " வணக்கம் சார், பெரிய தச்சூரைச் சேர்ந்த சுசீலா என்பவர் என்னிடம் வந்தார். அவர், 'டிரைவர் வேலைக்காக பிரகாஷ் மற்றும் நாசர் என்பவரிடம் பணம் கொடுத்தேன். ஆனால் மூன்றேகால் லட்சம் பணம் கொடுத்து பதினைந்து மாதம் ஆகியும் இன்னும் வேலையும் போடவில்லை, பணமும் திரும்பத் தரவில்லை' என்று சொல்கிறார். 'பிரகாஷிடம் கேட்டால் எம்.எல்.ஏ.விடம் கேளுங்கள் என்கிறார். எம்.எல்.ஏ.விடம் கேட்டால் இருங்கள் என்று சொல்கிறார் என்று என்னிடம் சொன்னார்' என்று சொல்லும் வக்கீல், நான் பிரகாஷிடமும் பேசினேன், அவர் உங்களிடத்தில் (எம்.எல்.ஏ.நாகராஜ்) தான் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்” என்றார்.

அதற்கு பதில் பேசிய எம்.எல்.ஏ நாகராஜ், “பணத்தை அமைச்சரிடம் கொடுத்தாகிவிட்டது. அவரிடம் நாம் போய் சண்டை போட்டு எல்லாம் பணத்தை வாங்க முடியாது. அரசியலில் இருக்கும்போது உடனே எல்லாம் அவரசப்பட முடியாது. உங்களுக்கு உடனே பணம் வேண்டுமென்றால் அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் அவர்களிடம் சொல்லி விட்டேன். ஒண்ணும் பிராப்ளம் இல்லை. உடனே அவர்களிடம் பணத்தை நான் கொடுத்து விட சொல்கிறேன். அவர்களை ஏமாற்ற நான் நினைக்கவில்லை" என்கிறார்.

இதற்கு பதில் சொல்லிய வக்கீல், "அவர்களால் வட்டிக் கட்டமுடியாமல் சிரமப்படுகிறார்கள். என்னிடம் வந்து காவல்துறையில் புகார் அளிக்க சொல்கிறார்கள். நீங்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறீர்கள் என்பதால்தான் உங்கள் பெயர் கெட்டுவிடக் கூடாது என்றுதான் உங்களுக்கு போன் செய்கிறேன்" என்கிறார்.

உடனே எதிர்முனையில் பேசும் (எம்.எல்.ஏ)நாகராஜ்), " ஒரு மாதத்திற்குள் கொடுத்துவிடுவேன். அவர் (அமைச்சர்) கொடுக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நான் கொடுத்துவிடுவேன். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இல்லை மொத்தம் 45 லட்சம் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறேன். இது தொடர்பாக அமைச்சரிடம் இரண்டு நாட்களாக பிரச்னை. நானாவது பரவாயில்லை உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு இருக்கிறாரே அவர் ஒரு கோடி ரூபாய் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சி. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து வைத்திருந்தோம். ஒரு மாதத்தில் பணம் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார்.

உடனே எதிர் முனையில் பேசிய வக்கீல், "நீங்கள் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் உங்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால், தற்போது தேர்தல் நேரத்தில் உங்கள் அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என்றுதான் நான் அமைதியாக இருக்கிறேன். பத்து நாட்களுக்குள்ளாக சீக்கிரம் முடித்து விடுங்கள்" என்பதோடு அந்த செல்போன் உரையாடல் முடிகிறது.

பாதிப்புக்குள்ளான சுசீலாவிடம் பேசினோம்.

“என் வீட்டுக்காரரு உடம்பு முடியாம எப்போவோ செத்துப் போயிட்டாருங்க. நாங்கள் விவசாயக் கூலிங்க சார். பணம் கொடுத்தா என் பையனுக்கு டிரைவர் வேலை வாங்கித் தரேன்னு சொன்னாங்க. அத நம்பி வட்டிக்கு கடனுக்கு வாங்கி மூன்றே கால் லட்சத்தை கொடுத்தோம். ஆனால் ஒரு வருஷத்துக்கும் மேலாகியும் என் புள்ளைக்கு வேலை கிடைக்கல. பணமும் கிடைக்கலை. கேட்டால் பொறுமையா இருங்கனு சொல்லி எம்.எல்.ஏ விரட்டுறாரு. சாப்பாட்டுக்கே வழியில்லாத என்னால வட்டிக் கூட கட்ட முடியவில்லை” என்கிறார் வேதனையுடன்.

இதுகுறித்து விளக்கம் கேட்க மயிலம் தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனை இருமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் இருமுறையும் நமது தொடர்பை துண்டித்துவிட்டார்.

No comments :

Post a Comment